Sunday, January 7, 2007

தவிப்பு --- ஞாநி

விமர்சினம் செய்தவர்-நண்பன்


ம.பொ.சி.யின் நினைவாக என்ற சமர்ப்பணத்துடன் புத்தகம் தனது பக்கங்களை விரிக்கிறது.


நீங்கள் அறிந்தவர் தானே ம.பொ.சி.? மாறுபட்ட கருத்தியல்களின் மோதல்களில் மடிந்து போன பரிதாபத்திற்குரிய தலைவர். ஒன்றை எதிர்ப்பதற்காக மற்றொன்றை ஆதரித்தவர். அதனாலேயே தனது கனவுகள் எவை கருத்துகள் எவை என்ற கருத்தியல் மோதல்களுக்குள் சிக்கி, சமரசம் செய்து கொள்ளத் தொடங்கி சிறிது சிறிதாக தன்னை இழந்தவர்.


கதையும் அவரைப் போலவே ஆக்ரோஷமான கருத்துகளுடன் மோதுகிறது. தமிழ் மொழியின், நிலத்தின் மீட்சியைக் கனவாகக் கொண்டு கதையை எழுதும் ஆசிரியரின் பார்வை ஏற்கனவே அறிமுகமானது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன்பாகவே இது பற்றிய விரிவானதொரு விவாதம் நம் தளத்தில் இருக்கிறது. அதில் பங்கு பெற்று நான் எழுதியவற்றைப் படித்தாலே போதும் இந்த புத்தகம் முன் வைக்கும் கருத்தியல்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.


ஆனால் கதை எழுதுவதற்கு கருத்தியல்கள் மட்டுமே போதுமானவை அல்ல. விறுவிறுபான பின்னணியுடன் கதை நகர்கிறது. கொள்கை பிடிப்புள்ள கதாபாத்திரங்கள் உற்சாகமூட்டுகின்றனர். சிறிது சிறிதாகப் புத்தகங்களின் பக்கங்கள் வளரும் பொழுதே அந்த இயக்கமும் வளர்ந்து விடுகிறது. அந்த இயக்கத்தை அரசியல்வாதிகள் எவ்வாறு தங்கள் சுயநலத்திற்காக பேரம் பேசுகின்றனர் என்பது தான் கதையின் சுவராசியமான பகுதி. மத்தியில் ஆளும் வர்க்கம் மாநிலத்தில் ஆளும் வர்க்கத்தை மட்டம் தட்ட முயலுவதும், மாநில அரசுகள் போர்க்குழுக்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் - ஒருவர் மீது மற்றவர் சேறு வாரி இறைக்கும் அழகை கவனப்படுத்துகிறது. செய்திகள் எவ்வாறு திரிக்கப்படுகின்றன என்பதையெல்லாம் - ஓரளவிற்கு அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வரும் வாசகர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாமேயன்றி, புதிதாக கதை வாசிக்கும் நபர்களுக்கு மிக்க விறுவிறுப்பான அம்சமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.



இவ்வாறு போகும் கதை இறுதியை நெருங்கும் பொழுது, நாயகன் தேர்தல் களத்தில் குதித்து வெற்றி பெற்று இந்த மோசமான அரசியல்வாதிகளை எதிர்கொள்கிறான் என்று கதையை முடிக்கும் பொழுது, சப்பென்று போய்விடுகிறது. கதையின் நோக்கமே சிதைந்து போகிறது. ஆனால் வேறு எப்படியும் கதையின் முடிவை எழுதவும் முடியாது - இந்தியாவிற்குள் இருந்து கொண்டு என்பதும் உண்மை. ஆசிரியர் கதையின் தொடக்கத்தில் முன்னுரையில் குறிப்பிட்டு விடுகிறார் - பல்வேறு இனங்களின் போராட்ட வரலாறுகளை மனதில் கொண்டு தான் கதையை எழுதியதாகக் குறிப்பிடுகிறார். என்றாலும் அவர் மிக அதிகமாக தன் கவனத்தில் எடுத்துக் கொண்டது பெரும்பாலும் அஸ்ஸாம் மாணவ போராட்டத்தைத் தான் என்றே எண்ண வைக்கிறது. மிகப் பெரும் உத்வேகத்துடன் போராடிய மாணவர்கள் இறுதியாக அறவழி என்று தேர்தல் களத்தில் குதித்து வெற்றி பெற்று பின்னர் அரசியல் அரங்கில் எவ்வாறு தோற்றுப் போனார்கள் என்று எல்லோரும் அறிந்தவையே.



ஒருவேளை அதனாலயே - எந்தப் போராட்டத்திற்கும் இந்தக் கதி வந்து விடக்கூடாது - மறைமுகமாக அந்தப்பின்னணியைக் கொண்டு எழுதினாரோ என்று தெரியவில்லை. ஆனால் சில தர்க்கங்கள் - எதற்காக தமிழ்ப் போராளிகள் இந்திய இறையாண்மையிலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறார்கள் என்ற தர்க்கங்கள் - நியாயமானவை. அரசு அதை இப்பொழுது கவனிக்கத் தவறினால் பின்னர் அதற்காகப் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்.


எல்லாத் தமிழ் உணர்வாளர்களும் படிக்க வேண்டிய புத்தகம். கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுமா - படாதா என்பது விவாதத்துக்குரியது.

__________________


 

Friday, December 29, 2006

தலைமுறைகள்-நீல பத்மநாபன்






கற்பனையே கலக்காமல் எழுதப்பட்டது போன்ற புனைவுப் பாவனை கொண்டது . இம்மி கூட மிகை இல்லாதது . வட்டார வழக்கிலேயே கதையையும் சொல்ல முயல்வது .அதாவது மைய ஒட்ட அம்சங்கள் எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க பிராந்திய வட்டாரக் கலாச்சார அடையாளத்தை நம்பி இயங்கும் படைப்பு அது. ஆகவே அதை க. நா .சு ,வெ சாமிநாதன் ஆகியோர் ஒரு முக்கிய முன்னுதாரண படைப்பாக கருதி முன்வைத்தார்கள் .இப்போதும் தமிழ் எழுத்தின் முக்கியமான வலிமை என்பது இங்குள்ள பெரும்பாலான படைப்புகளின் பிராந்திய அடையாளத்தில்தான் உள்ளது .அதற்கு வழிகாட்டிய படைப்பு இது. [இவ்வகையில் அடுத்தபடியாக குறிப்பிடப்படவேண்டிய படைப்பு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு ] சமீபத்தில் குமுதம் எடுத்த ஒரு சர்வேயில் தமிழின் 10 நாவல்கள் பட்டியலில் எல்லாருடைய பட்டியலிலும் இடம் பெற்றிருந்த நாவல்களில் தலைமுறைகளும் ஒன்று .இது இப்போதும் இப்படைப்புக்கு உள்ள விமரிசக அங்கீகாரத்தை காட்டுகிறது.இன்று இப்படைப்பு அதன் இறுதிப் பகுதி கவித்துவமாக அமையாமல் நாடகத்தன்மையுடன் அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக முக்கியமான படைப்பாகவெ கருதப்படுகிறது.

'தலைமுறை 'களின் கதை காலாகாலமாக இந்திய இலக்கியங்களின் பேசுபொருளாக உள்ள பெண்ணின் துயரம்தான் .நமது செவ்வியல் படைப்புகளிலும் சரி ,நவீன படைப்புகளிலும் சரி இவ்வாறு முக்கியமான அவலங்கள் பெண்கள் சார்ந்தவையாக இருப்பது சமூகவியல் ரீதியானகாழமான கவனத்துக்குரியது .ஏனெனில் பெண்கள் ஒடுக்கப்பட்டது உலகளாவிய நிகழ்வு ,பிற கலாச்சாரங்களில் மேலும் அதிகம் .அங்கெல்லாம் இப்படி பெண் காவியநாயகி யாக ஆக்கப்படவில்லை . வீரர்களே முக்கியமான காவியநாயகர்கள் அங்கு . இங்கு சீதையும் கண்ணகியும் மணிமேகலையும் காவியநாயகிகள்.அர்ச்சுனன்போன்ற ஒரு வீரனை ஐதீக மரபு உருவாகியபோதே அல்லியையும் அது உர்வாக்கியது .அடுத்த கட்ட வாய்மொழிக் கதைகளில் நல்லதங்காள் போன்ற அவல நாயகிகள் உள்ளனர் .பெண் ணை மையமாக்கிய அவலக்கதைகள் நம் அமரபின் கதைச்சொத்தின் பெரும்பகுதியை அடைத்துக் கொடன .பிற்பாடு நவீன புனைகதை வடிவங்கள் இஉருவான போது அதே பாணி தொடர்ந்தது .அக்கதைகளில் மரபில் உள்ள கதைகளின் தீவிரமான சாயல் இருந்தது இயல்பே.பிறகு திரைப்படங்களில் கூட அதே மரபுநீடித்தது .வான்மீகி ராமாயணமும் , மதர் இந்தியாவும் ஒரே நேர்கோட்டில் அமைந்தவையே .

இது குறித்து அடிப்படையான ஆய்வுக் குறிப்பொன்றை டி டி கோசாம்பி சொல்ல்லியுள்ளார். தாய்வழி சமூக அமைப்பாக இருந்து தந்தை வழி அமைப்புக்கு மாறியவையே இந்திய சமூகங்கள் ..நமது எண்ணற்ற தாய் தெய்வங்கள் அம்மரபின் தொடர்ச்சிகளே. நமது ஐதீக வாய் மொழிக்கதைகளில் அந்த வீழ்ச்சி குறியீட்டு வடிவில் முக்கிய இடம் பிடித்தது . பிறகு அத்தனை நேரடி வாழ்க்கை நினைவுப்பதிவுகளும் அந்த ஐதீக மரபில் இணைவு பெற்றன. ஆகவே காவியம் முதல் சிறிய கதை மரபு வரை வரை பெண்ணின் அவலம் முக்கிய மையமாயிற்று. இன்றும் நம் அகமன கட்டுமானத்தில் படிமங்களாக உள்ளது அந்த இறந்தகாலமே .ஆகவே நவீன இலக்கியங்கள் கூட அதே பாணியில் உள்ளன. பழிவாங்கும் உக்கிர தேவதை [பழையன்னூர் நீலி ] அருள் வழங்கும் அன்னை[ காஞ்சி காமாட்சி ] அடக்கியளும் அன்னை [சமயபுரம் மாரி ]என்று தமிழ் புனைகதைகளின் பெண் கதாபாத்திரங்களை நாம் தொல்படிம [aaன்] தர்க்கத்துக்குள் அடுக்கிப் பார்க்க முடியும்.

'தலைமுறை 'கள் அந்த மரபில் சகஜமாக இணைவதை அதன் தொடக்கப்புள்ளியிலேயே காணலாம். ஏழுவீட்டுச் செட்டிகளின் குடும்பத்தில் குலமரபின் வாய்மொழி ஐதீகமாக ஒரு கதை உள்ளது . அவர்களுடைய பூர்வீகம் காவிரிப்பூம்பட்டினம் .அவர்கள் அங்கிருக்கும்போது அங்குள்ள சோழ் மன்னனுக்கு விலைமதிப்பிட முடியாத சில பவளங்கள் கிடைக்கின்றன. அதில் துளைபோட்டு மாலையாக்க அங்குள்ள எல்லா பொற்கொல்லர்களும் முயன்றபோதும் முடியவில்லை .பவளங்கள் உடைந்து விடக்கூடும். என்ன செய்வதென்று மன்னன் தவித்து கடசியில் தன் அவையில் இருந்த ஒரு செட்டியாரை கூப்பிட்டு நீர் என்ன செய்வீரென்று தெரியாது நாளைக்கு விடிவதற்குள் இந்த பவளங்களுக்கு துளைபோட்டு கொண்டுவரவேண்டும் இல்லையேல் கழுத்தில் தலை இருக்காதெள என்று உத்தரவு போடுகிறான் . வீட்டுக்கு வந்த செட்டியார் கவலையுடன் இருப்பது கண்ட அவரது இரு மகள்கள் தங்கம்மையும் தாயம்மையும்தேற்றுகிறார்கள் .துளையை தாங்கள் போட்டு விடுவதாகச் சொல்கிறார்கள் .ஊசி நுனியில் பனைவெல்லச் சாறை தொட்டு ஒவ்வொரு பவளத்திலாக ஒரு பொட்டு வைத்து அவற்றை வரிசையாக எறும்பு புற்றுக்கு முன்னால் போடு விடுகிறார்கள் .எறும்புகள் வெல்ல வாசனையை குறிவைத்து அரித்து எல்லா பவளங்களிலும் சிறு துளைபோட்டு விடுகின்றன .

இந்த விஷயம் தெரியவந்தபோது மன்னன் இத்தனை அறிவுள்ள பெண்கள் இருக்கவேண்டிய இடம் அந்தப்புரம்தான் என்று சொல்லி பெண் கேட்கிறான் . சாதியை விட்டு பெண் கொடுக்க செட்டியார் குலத்துக்கு விருப்பமில்லை . மறுக்கவும் முடியாது .ஆகவே செட்டியார் தன் வீட்டில் இருந்த நிலவறைக்குள் அப்பெண்களை போகச்சொல்லி மூடி மேலே மண்ணை நிரப்பி விட்டார். பிறகு எல்லாரும் அங்கிருந்து கிளம்பி நடந்து குமரிமாவட்டம் வந்து இரணீயலில் குடியேறுகிறார்கள் . இந்தக் கதையை இந்நாவலின் முக்கிய கதாபாத்திரமான உண்ணாமுலை ஆச்சி தன் பெரனும் கதாநாயகனுமாகிய திரவியத்துக்கு குழந்தையாக இருக்கும் போது வீட்டை பெருக்கி கோலம் போட்டபடி சொல்கிறாள் .குறியீட்டு ரீதியாகப்பார்த்தால் பெண் புதைக்கப்பட்ட மேடு மீதுதான்நேழுவீட்டு செட்டியார் குலமே கட்டப்பட்டுள்ளது .அந்தக் குற்றவுணர்வு தலைமுறைதலைமூறையாக கைமாறவும் படுகிறது .ஆனால் அடிப்படையில் அது ஆண்வழி அதிகாரக்குலம் .அதன் அடையாளம் உலகமே தனக்கானது என்று எண்ணும் கூனங்காணிப்பாட்டா .

ஆகவே நாகு அக்கா அவள் கணவனால் குழந்தைபெற முடியாதவள் என்று விலக்கப்பட்ட போது ,சர்வ சகஜமான அந்த செயலுக்கு எதிராக திரவி செயல்பட ஆரம்பித்தது ஒரு முக்கியமான புரட்சி .ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டுபோய் அக்காவிடம் எந்தப் பிரச்சினையுமில்லை என்று அவன் நிரூபத்தது ஒருவகையில் அடுத்த காலகட்டத்தின் ---அறிவியல் காலட்டத்தின்-- வருகையின் குறியீடுமாகும் .அவள் கணவன் அவளை ஏற்கமறுத்தபோது அவளுக்கு மறுமணம் செய்விக்க அவன்முயன்றது கண்டிப்பாக ஒரு பெரும் புரட்சி நடவடிக்கையே . ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை .மொத்த நாவலும் தீவிரமான அவலத்தில் முடிகிறது . இந்த அவல முடிவு பெரிதும் விவாதிக்கப்பட்டது . அந்த வலம் சினிமாத்தனமாக இருப்பதாக முதிர்ச்சியில்லா விமரிசகர்கள் சொல்ல அழகியல் மொழி அறிந்தவர்கள் அம்முடிவு அதுவரை நாவலுக்கு இருந்துவந்த அப்பட்டமான நிதரிசனப்போக்குக்கு ஒத்து வராமையினால் சற்று நம்பகத்தன்மையை இழந்து விட்டிருக்கிறது என்றார்கள் . ஆனால் ந்தன் விடையை நாம் இலக்கிய வடிவில் மட்ட்மே தேடி விட முடியாது . தலைமுறைகள் ஒரு நீண்டன் வாய்மொழிமரபின் , ஐதீக மரபின் இன்றியமையாத தொடர்ச்சியாகும் .அம்மரபில்ஈருந்துவரும் அவல முடிவை அதுவும் தவிர்க்க முடியாது . அதாவது அந்த பவளம் கோர்க்கும் கதை நாவலின் தொடக்கத்தில் வந்ததுமே குறியீட்டு ரீதியாக நாவலை அது தீர்மானித்து விட்டது .அதை நீல பத்மனாபன் மீறிவிட முடியாது . சொந்த வாழ்வில் அவர் அதை மீறி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கதை எப்போதுமே கதைமரபின் தர்க்கத்துக்கு உட்பட்டது .

'தலைமுறை 'களின் நடை பெரிதும் பாராட்டப்பட்டது.ஏற்கனவே சொல்லப்பட்டது போல அது மிக நிதரிசனமான நடை .அதில் சுவாரஸியப்படுத்தும் அம்சங்கள் ஏதும் இல்லை .அழகுகளே இல்லை .உண்மையிலேயே அத்தகைய ஒரு வாழ்க்கைச் சூழலுக்கு எவ்வளவு உத்வேகம் இருக்குமோ அவ்வளவு உத்வேகமே அதிலும் உள்ளது. பொதுவாக இக்கியப்படைப்புகளில் கதைமையம் அல்லது கதைசொல்லி அறிவாளியாகவோ ,மிகுந்த நுண்ணுணர்வுள்ளவனாகவோ காட்டப்படுவதே வழக்கம் . காரணாம் அவன் மூலம் ஆசிரியர் வெளிப்படுகிறார் என்பதே .ஆனால் திரவி மிகச்சாதாரணமானவனாகவே காட்டப்படுகிறான்.லெளகீகமான , நடுத்தர வற்கத்துகே உரிய எல்லா கோழைத்தனங்களும் தயக்கங்களுமுள்ள ஒருவன் . அவன் புரட்சியாளனோ கலகக் காரனோ அல்ல .அவன் சற்று படித்து அதன்

மூலம் நவீன காலகட்டத்துக்குள் வந்தது மட்டுமே அவனுக்கும் பிறருக்குமிடையேயான வித்தியாசம் .இதன் மூலம் நாவலின் ஒவ்வொரு வரியிலும் நம்பகத்தன்மைமிக்க எளிமை உருவாகிவந்தது . ' 'சர்வ சாதாரணத்தின் கலை ' ' என்று தமிழில் எதையாவது சொல்லவேண்டுமென்றால் நீலபத்மநாபனின் இந்நாவலையே சொல்ல முடியும்.சாதாரணமான நடையின் சாதாரணத்தன்மையை மேலும் அதிகரிக்கும் முகமாக நீலபத்மநாபன் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் கதை சொல்லும் குரலுக்கும் வட்டார வழக்கை அளித்தார் .இது அக்காலகட்டத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டது .தூயதமிழ் வாதிகளின் எதிர்ப்பு நாவலுக்கு ஒரு எதிர்மறை விளம்பரமாகவும் அமைந்தது .

'சர்வசாதாரணம் ' என்பதற்கும் 'சர்வசாதாரணத்தின் கலை ' என்பதற்கும் ஏராளமான வேறுபாடு உண்டு . கலையின் சர்வசாதாரண இயல்பு ஒரு தோற்றமே . அது வாசக நம்பிக்கைக்காக உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு உத்தி மட்டுமே .கலை ஒரு போதும் சர்வசாதாரணமல்ல .சாதாரணமான நிகழ்வுகளின் பிரவாகமான வாழ்க்கை ஓட்டத்திலிருந்து சிலவற்றை பிரித்தெடுத்து முன்வைத்து ,அழுத்தம்தந்து ,உபரி அர்த்தம் அளித்து ,விளக்கி ,செறிவுபடுத்தி அதில் வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் சார்ந்த ஒரு பார்வையை அல்லது ஒரு அகத்தெளிவை குறிப்புணர்த்திக் காட்டுவதே இலக்கியக்கலையின் செயல்பாடாகும் .எல்லா கலையும் இவ்வியல்பினையே கொண்டிருக்கின்றன என்பார்கள் மொழியியல் பேராசிரியர்கள் .ஹால்லிடே முன்னிறுத்தல் [forefronting] என்று இதை விரிவாக விளக்குகிறார் . உதாரணமாக நித்ய சைதன்ய யதி ஒன்றை குறிப்பிடுவார் .வான்கா ஒரு ஏழை விவசாயியின் பழைய செருப்பை வரைந்தார் .அது ஒரு வெறும் பொருள்தான்.ஆனால் அதை முன்னிலைப்படுத்தி விடுகிறார் .அவரது கலை என்பது அங்குதான் செயல்படுகிறது . அதன் பிறகு அந்த செருப்புகள் வெறும் பொருட்களல்ல ,குறியீடுகள் ஆகிவிடுகின்றன அவை .அவற்றுக்கு உள்ளர்த்தங்கள் உருவாகி விடுகின்றன.உண்மையில் ஒரு பழைய செருப்பு உருவாக்காத பலவகையான மன அதிர்வுகளை அவை நம்முள் உருவாக்குகின்றன .

அதாவது உத்தி என்று பார்த்தால் மிகைப்படுத்தல் சாதாரணமாக்கல் ஆகிய இரண்டுக்குமே ஒரே மதிப்புதான் .தன்னளவில் எதற்கும் மதிப்போ இழிவோ உருவாவது இல்லை .ஒப்பீடூ சார்ந்து தற்காலிகமான மதிப்பீடுகள் உருவாகுமென்பது உண்மையே .அதாவது ஒரு சூழலில் எல்லா படைப்புகளுமே மிகையான கற்பனாவாதத் தன்மையுடன் இருக்கும்போது வரும் அப்பட்டமான யதார்த்தவாதப்படைப்பு அச்சூழலில் அதிர்ச்சியையும் அதன்மூலம் கவன ஈர்ப்பையும் அதன் அடுத்த கட்டமாக விமரிசன முக்கியத்துவத்தையும் பெறக்கூடும்.அதேபோலவே யதார்த்தவாத படைப்புகள் மலிந்த காலத்தில் வெளிவரும் அற்புத யதார்த்த படைப்புக்கும் அந்த முக்கியத்துவம் ஏற்படலாம் . ஆனால் படைப்பின் மொத்தமான முக்கியத்துவமென்ன

அதற்கு அவ்வுத்தி என்ன வகையில் பங்காற்றியுள்ளது என்பதே முக்கியமானது . தலைமுறைகளின் மேல்தளம் சாதாரணமானது என்றாலும் அதன் அடித்தளத்தில் நாம்வாழும் சமூகம் சார்ந்த சிக்கல்கள் சருமத்துக்கு அடியில் ரத்தக்குழாயின் பின்னல்கள் போல அடர்ந்துள்ளன. ஒரே ஒரு உதாரணம் சொல்லலாம்.திரவி தான் சார்ந்த ஏழுவீட்டு செட்டியார் சாதியை அதன் பழைமைப்போக்குகளில் இருந்து மீட்டு அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல முயல்பவன். அதேசமயம் அவன் தன்னை அறியாமலேயே பழைய காலத்துக்கான ஏக்கத்தையும் வெளிப்படுத்தியபடியே இருக்கிறான்.இந்தமுரண்பாடு எளிதில் விளக்கிவிடக் கூடியது அல்ல

திரவி இலட்சியவாதி அல்ல .தன் அக்காவை அவளது வாழ்க்கையின் துக்கத்திலிருந்து மீட்பதே அவனது இலக்கு .அவன் புதியகாலத்துக்கு போக முனைவது ஒரு சமூகஜீவியாக .அவனது மனம் இளமைப்பருவத்தை எண்ணி கடந்தகால வாழ்க்கைக்காக ஏங்குவது ஒரு தனிமனிதனாக . இத்தகைய ஆழமான அகமுரண்பாடுகள் நிரம்பிய ஒரு பரப்பாக உள்ளது தலைமுறைகளின் கதையோட்டம் .

'தலைமுறை 'களை மிக இளம்வயதில் படிக்கும்போது விசித்திரமான ஒரு பொறுமையின்மை ஏற்படும். திரவி என்ன செய்தும் ஒன்றுமே நிகழவில்லை .கூடிக்கூடிப் பேசுகிறார்கள்.மனக்கசப்புகளையும் நெகிழ்வுகளையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் .உறவுச்சிக்கல்கள் அடர்ந்து விரிந்தபடியே செல்கின்றன . மிக எளிய விஷயம் ,ஆனால் அது நடக்கவே இல்லை . ஒரு கட்டத்தில் தமிழக வாழ்க்கைச் சூழலை அறிந்தவர்களுக்கு நாகுவின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற உண்மை புலப்பட்டுவிடும்.அதன் பின்பும் பேச்சுகள் .அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.குடும்பம் இரணியலைவிட்டு கிளம்புகிறது .நம் எளிய வாசக மனம் வேறு வகை முடிவுகளுக்காக துடிப்புகொள்வதும் ஆசிரியர் மீது மனக்கசப்பு கொள்வதும் இயல்பே . ஆனால் இம்முடிவே தமிழ் வாழ்க்கைச்சூழலில் பெருமளவு நடக்கக் கூடியது .மாறாக நடப்பது விதிவிலக்கே . 'தலைமுறைகள் ' அதன் யதார்த்த இயல்புப்படி விதியையே சார்ந்து இயங்க முடியும் .விதிவிலக்குகளை மையமாக்கும் படைப்புகள் கற்பனாவாதம் நோக்கி நகர்கின்றன.

'தலைமுறைகள் 'அவ்வகையில் ஒரு முன்னோடியாக அமைந்தது. நாம் முதலில் எழுதவேண்டியது கனவுகளையல்ல நிதரிசனத்தை என்று அது கற்பித்தது . எந்தக் கனவும் நிதரிசனம் சார்ந்து செயல்படும்போதே முக்கியத்துவம் பெறுகிறது என்று பொட்டில் அடித்தது போல சொல்லியது. இப்போது யோசிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது . அக்காலகட்டம் அரசியல் நோக்கோடு உற்பத்தி செய்யப்பட்ட வெற்றுக்கனவுகளும் ஆடம்பரச் சொற்களும் காற்றில் நிரம்பியருந்த காலகட்டம் . கற்பனாவதப்படைப்புகளை வாசகர்கள் ருசித்து விழுங்கிக் கொண்டிருந்த காலகட்டம் .அச்சூழலில் இருந்தபடி இத்தனை கறாரான யதார்த்த உலகை ஆக்குவதற்கு தன் கலையில் முழுக்க ஆழ்ந்து போகும் மனஒருமை கூடவேண்டும் . தன் கலைமீது ஆழமான நம்பிக்கை உருவாகவேண்டும் . மேலான கலைப்படைப்பு அதை சகஜமாக உருவாக்கிவிடும்போலும்.அந்த கலையம்சத்தால்தான் அது உருவான காலகட்டத்தின் எல்லா சூழல்சார்ந்த அர்த்தங்களும் அடிக்குறிப்புகளும் இல்லாமல்போன அடுத்த காலகட்டத்திலும் அதற்கடுத்த காலகட்டத்திலும் அந்நாவல் சட்டையுரித்து முன்னகரும் அரவம் போல புற அடையாளங்களையெல்லாம் கழட்டிப்போட்டு சென்றபடியெ இருக்கிறது போலும்.

Sunday, December 24, 2006

உறுபசி- எஸ்.ராமகிருஷ்ணன்

கதை, சம்பத் என்ற நண்பனைப் பற்றியது. சம்பத்தின் மரணத்தில் இருந்து தொடங்கும் கதை, அவனது மூன்று நண்பர்கள் - அழகர், ராமதுரை, மாரியப்பன் - ஆகியோரின் பார்வையில் நடத்திச் செல்லப்படுகிறது. மூவரும் கானல் காட்டுக்குப் போய் நண்பனைப் பற்றி யோசிக்கிறார்கள். ஒவ்வொரு நண்பரிடமும் சம்பத் எவ்விதமான உறவு கொண்டிருந்தான் என்பதில் விரியும் கதை, மிகவும் கட்டுக்கோப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவான வார்த்தைகளில் சொல்வதானால், சம்பத் ஒன்றுக்கும் உதவாதவன். வழக்கமான எந்த சட்டகங்களுக்குள்ளும் அவனைப் பொருத்திப் பார்க்க முடியாது. நினைத்த நேரத்தில் நினைத்த வேலையைச் செய்து, நினைத்த எண்ணங்களைச் செயல்படுத்திக்கொண்டு தான்தோன்றித்தனமாக வாழ்பவன். அவனது காதல், மேடைப் பேச்சு, அரசியல் ஈடுபாடு, பின்னால், காசநோய் கண்டு தாம்பரம் சானடோரியம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, 40 நாள் கழித்து இறந்து போகிறான்.


மத்திம வயதிலிருக்கும் எந்தவொரு மனிதனும் தான் கடந்து வந்த வாழ்க்கையின் நிறைவான, சுதந்திரமாக வாழ்ந்த கட்டங்களை பின்னோக்குகையில் அது பெரும்பாலும் அவனுடைய கல்லூரிக்காலமாகத்தானிருக்கும். இந்த சமயத்தில் ஏற்படுகிற நட்பு பெரும்பாலும் கல்லூரி வாசலை தாண்டினவுடனே அற்பாயுளில் மடிந்துவிடும் நிலையில், அதற்குப் பிறகும் அந்த நட்பை தொடரும் வகையில் சூழலை ஏற்படுத்திக் கொள்பவர்கள் பாக்கியவான்கள். அலுவலக இயந்திர வாழ்க்கையின் அலுப்பிலிருந்தும் குடும்பச் சிக்கல்களின் சலிப்பிலிருந்தும் விலகி எப்போதாவது கூடி தங்களைது கல்லூரி நினைவுகளை குடியின் துணையுடன் சிரிப்பும் கும்மாளமுமாக மீட்டெடுத்துக் கொள்ளும் அந்த கணங்கள் அற்புதமானவை. விதவிதமான குணச்சித்திரங்கள் நட்பு என்கிற ஒரே புள்ளியில் தங்களின் தற்போதைய அந்தஸ்தை மறந்து ஒரே சபையில் அமர்வது அற்புதமானவை. இந்த நிலையில் சக நண்பனின் மரணம் ஏற்படுத்தும் வலியும் துயரமும் வீர்யமிக்கவை.



'சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் மூவரும் எங்காவது பரிச்சயமே இல்லாத ஒரு இடத்திற்குப் போய்விடலாம் என்று கானல் காட்டின் பெரும்பாதையில் வந்து இறங்கியிருந்தோம் ' என்று ஒரு சிறுகதையின் ஆரம்பத்தைப் போல் திடுக்கென்று சம்பத்தின் மரணத்தைப் பற்றின ஆரம்பத்தோடு தொடங்குகின்ற இந்த நாவலில் சம்பத் என்கிற மனிதனின் ஆளுமையைப் பற்றின மற்றும் அவனுடைய மரணத்தைப் பற்றின வாசனையால் நிறைந்திருக்கிறது. அழகர், சம்பத், ராமதுரை, மாரியப்பன் என்கிற நால்வர் தமிழ் இலக்கியம் படிப்பதின் மூலம் நண்பர்களானவர்கள். இவர்களில் சம்பத் என்பவனின் மரணத்தைத் தொடர்ந்து அவனைப் பற்றிய நினைவுகள் அவனுடைய நண்பர்கள், காதலி, மனைவி போன்றவர்களால் இந்த நாவலில் விரிகிறது. சம்பத்தின் மரணத்தைத் தொடர்ந்து நடக்கிற மரண ஏற்பாட்டு நிகழ்வுகளும் இந்த நினைவுகளின் ஊடே சொல்லப்படுகிறது.



சம்பத்தான் இந்த நாவலின் மையப்பகுதியாகவும், ஆதார சுருதியாகவும் இருக்கிறான். அவனைப் பற்றின சித்திரம் இயல்பான வண்ணங்களால் திறமையாக தீட்டப்பட்டு இந்த நாவல் முழுவதும் நமக்கு தரிசனம் தருகின்றன. சம்பத்தின் ஆளுமைக்கூறுகள் நாவலில் ஆங்காங்கே சிதறியிருக்கின்றன. அவன் உங்களின் நண்பர்கள் யாராவையாவது உங்களுக்கு நினைவுபடுத்தக்கூடும் அல்லது நீங்களே சம்பத்தாகக்கூட உணரக்கூடும். தான் நினைத்தை உடனே நிகழ்த்திப் பார்க்க பிரியப்படுபவன்; தன்னிடம் உறைந்திருக்கும் பயத்தை மறைக்க மூர்க்கத்தனமாக நடந்து கொள்பவன்; தமிழிலக்கயம் படிக்கப்போய் நாத்திகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்படுபவன்; வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு போல்ட்டு, நட்டு விற்கிறவன்; பீர் குடித்து ஒத்துக் கொள்ளாமல் ஏறக்குறைய சாகப் போய் பிழைக்கிறவன், சில முறையே சந்திக்கிற பெண்ணை தீடாரென தீர்மானித்து ஒரு லாட்ஜ் அறைக்குள் திருமணம் செய்து கொள்கிறவன், அப்பாவை கட்டையால் ரத்தம் வர அடிக்கிறவன், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு மறுநாள் மீன்குழம்பைப் பற்றி பேசுகிறவன் ... என சம்பத்தைப் பற்றின பல நிகழ்ச்சிகளின் மூலம் அவனைப் பற்றி பிரமிப்பாகவும், விநோதமாகவும் நமக்கு தோற்றமளிக்கச் செய்கிறவன். இதனாலேயே அவன் நண்பர்களால் கதாநாயகத்தன்மையுடனும் கூடவே வெறுப்புணர்ச்சியுடனும் பார்க்கப்படுகிறவன்.



காலமும் பரப்பும் குறுகியிருக்கிற காரணத்தினாலேயே இந்தப் படைப்பை நாவல் என்றழைக்க தயக்கமாயிருந்தால் ஒரு செளகரியத்துக்காக குறுநாவல் என்று வகைப்படுத்தலாம். 'நான் சம்பத்தின் கைகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ' (பக்22) போன்ற இலக்கணப் பிழைகள் நாவலின் இடையே நெருடுகின்றன. எல்லா நண்பர்களின் மூலமாகவும் சம்பத்தின் நினைவுகள் விவரிக்கப்பட்டுள்ளதால் எந்த நண்பரின் மூலமாக குறிப்பிட்ட பகுதி பதிவாகிறது என்பதில் சற்றே குழப்பமேற்படுத்தும் வகையில் நாவலின் நடை செல்வதை ஆசிரியர் முயன்றிருந்தால் தவிர்த்திருக்கலாம்.



முழுக்க கற்பனையினாலேயே எழுதப்படும் படைப்பை ஒரிரு பக்கங்கள் தாண்டினவுடனேயே ஒரு கூர்மையான வாசகன் அவதானித்து விட முடியும். மாறாக வாழ்க்கையின் அனுபவத்தின் சாரத்திலிருந்து எழும் நாவல்கள், வாசகனின் மனதில் இனம் புரியான நெருக்கத்தையும் தோமையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இந்த நாவலெங்கும் யதார்த்தமும், உண்மையின் வாசனையுமாக உணர முடிவதால் சமீபத்திய வரவில் குறிப்பிடுத்தகுந்த படைப்பாக இதைக் கொள்ளலாம்

பெரும்பாலும் வாழ்வில் தோல்வி கண்டவர்களை மையமாக வைத்து எழுதப்படும் படைப்புகள் வெற்றி பெற்றிருக்கின்றன. வெற்றிக் கதைகள் எப்படி உற்சாகம் தருகின்றனவோ, அதேபோல் தோல்விக் கதைகள் இலக்கியமாகி இருக்கின்றன. இதுவும் தோல்விபெற்றவனின் வாழ்வையே பேசுகிறது.

வாடிவாசல் -சி.சு.செல்லப்பா




ஜெல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில்நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதற்கு வேண்டும். தான் போராடுவது மனிதனுடன் அல்ல. ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும்.

வாடிவாசல் குறித்து ஜெயமோகன்

உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. 'ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ' என்ற அசரீரிக் குரல் தமிழ மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.


காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை

இந்த நாவலின் கதாநாயகனான பிச்சி,அவன் கூட்டாளியும் மச்சினனுமான மருதன், அவர்கள் ஜல்லிக்கட்டின் போது சந்திக்கும் கிழவன், காரி காளையை வைத்திருக்கும் ஜமீன்தார் என்ற அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கபட்டிருக்கின்றன.

ஒரே நாளில் நடைபெறும் சம்பவமாக இந்த கதை சித்தரிக்கப்பட்டு இருப்பது கதையின் விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது.தன் தந்தையின் உயிர் பிரிய காரணமாக இருந்த காளையை அடக்க வரும் ஒரு வீரனின் கதையை கச்சிதமாக வார்த்தைகளில் கூறுவதில் வெற்றி பெற்றுள்ளார் கதாசிரியர்.

வட்டார வழக்கில், அடுத்து என்ன நடக்கும் என நம்மை எதிர்ப்பார்க்க வைத்து இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் .

மாடு அணைவது ஐந்தறிவு மிருகத்திற்கும், மனிதனுக்கும் நடக்கும் நேரடி யுத்தம் இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை விட அந்த நேரத்தில் ஏற்படும் மனபோராட்டங்கள் மிக முக்கியமானவை.இடையிடேயே அந்த காலத்தில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரிய மனிதர்களுக்குமுன்

எவ்வளவு பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக எடுத்து சொல்கிறது. ஜல்லிக்கட்டைப் பற்றி நமக்கு ஏற்படும் பல சந்தேகங்களை எளிய தமிழில் விளக்குகிறது.

40 வருடங்களுக்கு முன் வந்த இந்த நாவல் இன்னும் அழியாபுகழோடு இருப்பதற்கு காரணம் அதன் எளிய தமிழ் நடை மற்றும் களம்.

 

அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள் '

தமிழில் சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட நாவல்கள் என்று குறிப்பிடும்படியான ஒரு சில மட்டுமே இருந்தாலும் கரைந்த நிழல்களை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் இதை விட இன்னமும் சிறப்பாக சினிமா உலகத்தைப் பற்றிச் சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது.

கரைந்த நிழல்கள் - பிம்பங்களாகத் திரையில் வரும் நிழல்களுக்குப் பின்னால் கரைந்து போகும் மனிதர்களைப் பற்றிய கதை. இந்த நாவல் வழக்கமான கதை பாணியில் அமையாமல் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு கால இடைவெளிக்கு ஏற்ப அத்தியாயஙகளாக அமைந்த நாவல். திரைப்படம் என்னும் மாய உலகுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.

கரைந்த நிழல்கள் குறித்து சா.கந்தசாமி

"கரைந்த நிழல்கள் போன்ற நல்ல நாவல்கள் தமிழில் நல்ல சினிமாவை அளிக்க இருக்கின்றன. அதனைக் கையாள ஒரு டைரக்டர் முன் வரவேண்டும். வராத வரையில் நாவலுக்கோ, நாவலாசிரியருக்கோ குறைவு ஒன்ரும் கிடையாது என்பது நாவலுக்குப் பெருமை தரும் விஷயமாகவே உள்ளது"


சினிமா சம்பந்தப்பட்ட எவ்வளவோ விஷயங்கள் - அவுட்டோர் - இண்டோர் ஷூட்டிங் பிரச்னைகள், அதற்கான முன்னேற்பாடுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள், தீர்வு காணும் முயற்சிகள், நடிகையின் முட், படத் தயாரிப்பாளரின் வீழ்ச்சி, படத்தின் வெற்றி-தோல்வி, படவுலகக் கவர்ச்சியும் பளபளப்பும், ஸ்டுடியோ நிர்வாகம், புது யூனிட் கட்டுதல், விநியோகமும் விளம்பரமும், இன்னபிற சினிமா விஷயங்களும் நம் கண் முன்னே காட்சிகளாக விரிகிறது.

முதல் அத்தியாயத்திலேயே நிஜமான சினிமா உலகத்தைக் காட்டும்போது திரையில் இதுவரை பார்த்து வந்த பிம்பங்களின் கவர்ச்சி போய்விடுகிறது. பெரும்பாலும் தன்னுடைய நாவல்களில் நனவோட்டம் என்ற முறையை அவர் வெகுவாகத் தவிர்த்துவிடுவதால், பாத்திரங்களின் செயல், பேச்சு ஆகியவற்றின் மூலம் கதை வளர்கிறது.

சினிமாவில் புரொடக்ஷன் மானேஜர் என்பவர் அந்தக் காலத்தில் விதிக்கப்பட்ட பத்தினிப் பெண்ணின் இலக்கணத்துக்கு ( ?) எந்தக் காலத்திலும் பொருந்திவர வேண்டியவர். எல்லோருக்கும் பின் தூங்கி முன் எழ வேண்டும். புரொடக்ஷன் மானேஜர் (தயாரிப்பு நிர்வாகி) நடராஜன், அதிகாலை மூணு மணிக்கு 'ஆறு ஷாட் மொத்தமே நூற்றைம்பது அடி ' படமெடுக்கவேண்டிய ஒரு குரூப் சாங்குக்கு வேண்டிய பிரயத்னங்களைப் பரபரப்புடன் பண்ணுவதில் துவங்குகிறது முதல் அத்தியாயம். வெறும் விடிகாலை நேரம் மட்டுமல்ல; தயாரிப்பாளர் ரெட்டியாரின் வீடு அடுத்தவாரம் அட்டாச்மெண்டுக்கு வரப்போகிற நேரம், பின்னால் ரெட்டியார் காணாமல் போய்விடுகிறார். அவரிடம் கடைசி நிலை ஊழியம் பார்த்த சம்பத் டைரக்டராகவோ, தயாரிப்பாளராகவோ உயர்ந்து விடுகிறான். பத்து தயாரிப்பாளர் போனால், 100 பேர் இண்டஸ்டிரிக்கு வருவது சினிமாவின் நிரந்தரம். அதன் உதாரணம் மேற்சொன்ன சம்பவம் என்று சொல்லலாம்.

கரைந்த நிழல்களின் மிகச்சிறப்பான அம்சம் மிகக்குறைந்த வரிகள் கொண்ட வர்ணிப்புகளாலும், சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் வாய்ப்பேச்சாக வரும் ஓரிரு வரிகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும் மறுத்துச் சொல்லமுடியாத 'வகை மாதிரியான ' கதாபாத்திரங்கள்தான். 'மாமண்டூரில வெத்திலை கிடைக்குமில்லே ? ' என்று கேட்கும் ராம்லால். பொங்கலுக்கு பூஜைபோட கோயம்புத்தூரில இருந்து பார்ட்டி வராங்க ' என்று சொல்லும், இன்டிபெண்டட்டாக படம் இயக்க இருக்கும் உதவி இயக்குனர் ராஜகோபால். உடையிலும், பாவனையில் எப்போதும் நாசுக்கு காட்டும் சிட்டி (எடிட்டிங் அஸிஸ்டென்ட்) இரண்டு நூறுநாள் படங்கள் கொடுத்த டைரக்டர் ராம்சிங்கைச் சுற்றி நாலைந்து நாற்காலிகள் இருந்தும் யாரும் உட்காராதது. ஸ்டூடியோ போகும் வழியில் தன் உறவினரை ஷூட்டிங் பார்க்க அழைத்துவர அவசரம் காட்டும் சம்பத். தன் வீட்டிலேயே மற்றவர்களுடன் நேராகக் கூட பேச இயலாத ராம ஐய்யங்கார். தான் வசனமெழுதிய படம் பிரபலமானதும் புதிதாக அரை டஜன் பட்டு ஜிப்பாக்கள் தைத்துக் கொண்ட கதாசிரியர். படம் போடச் சொல்ல அழைப்பு மணி இருந்தும் ஆபரேட்டர் ரூமுக்கே ஓடிப்போய் சொல்லிவிட்டு வருகிற பண்டிட்ஜி என்று உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்னொன்று, வாழ்க்கையின் ஈவிரக்கமற்ற, விசித்திரமான ரகசியச்சிரிப்பு - மிகவும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருப்பது. ஒரு இளம் நடிகையின் அலட்சியத்தினால் அழிந்த புரொடக்ஷன் கம்பெனி, அந்த கம்பெனியின் ஸ்கிரிப்ட்ஸ் ரிப்போர்ட்ஸ் முதலியவை கரையான்களால் அரிக்கப்பட்டு அரைப்படி தூசாக மக்கிப்போன கதை. ராம ஐயங்காரின் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்கள் ஏதோ ஒரு மொழி வெறி இயக்கத்தினால் தவிடு பொடியாவது, சம்பத்தின் உயர்வு, நடராஜனின் தாழ்வு இன்னபிற.

அந்தக்காலப் படங்களில் வகுக்கப்பட்ட இலக்கணமாக, கால இடைவெளியைக் குறிக்க fade in, fade out என்கிற உத்தியைக் கடைபிடிப்பார்கள்(இப்போதெல்லாம் வர்ஜா வர்ஜியமில்லாமல் cut to cut தான்) கால நீட்சியை ரஸிகன் தானும் உணரத்தக்க வகையில் அமைந்த கட்டுக்கோப்பு அந்த உத்தி. அதே பாணியில், நான்கு sequenceகளை பத்து அத்யாயங்களாக அமைத்துக் கொண்டு நாவலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். சில அத்யாயங்கள் நாவலுக்கு பொருந்தி வராதது போலத் தோற்றம் காட்டினாலும், ஏதோ ஒரு வகையில் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருப்பது உன்னிப்பாக பார்க்கும் போது புலனாகும்.

உதாரணமாக ராம ஐயங்காரும் அவரது மகன் பாச்சாவும் பேசிக்கொள்வதும், சற்றே புத்திசாலித்தனம் துருத்திக் கொண்டு தெரியும் ஒற்றைவரி வாதப் பிரதிவாதங்களினால் அமைக்கப்பட்ட ஒன்பதாம் அத்யாயத்தின் முன்பகுதி, கடைசியில் வருகிற கிட்டத்தட்ட மூன்று பக்க அளவுள்ள ராமாஐயங்காரின் அறிக்கை போன்ற நீளமான பேச்சினால் ஈடுகட்டப்பட்டுவிடுகிறது. அது வெறும் லெளகீக வாதியின் விருதாவான அறிவுரை அல்ல! எந்த ஓர் முந்தைய தலைமுறை மனிதனும் தனக்குத்தானே வெற்றியை தேடிக்கொண்டவன் என்ற ஹோதாவில், அடுத்த தலைமுறை மனிதனுக்குத் தன்னை வெளிப்படுத்தி பின்னவன் குறையை குத்திக்காட்டும் மாறாத தீவிரமாகத்தான் தோன்றுகிறது. நாவலின் இறுதியில் நெருடுகிற விஷயங்கள் இரண்டு. ஜெயச்சந்திரிகா, ராஜகோபாலைத் திருமணம் செய்து கொள்வது, நடராஜனின் வீழ்ச்சி. இரண்டுமே கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்டவை. முதல் இருவர் தொடர்பான முடிவுக்குக்கூட 'யாரும் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராத ஒருவனிடம் அசாதாரண கவனம் காட்டுவது ஜெயச்சந்திரிகாவின் இயல்பு ' என்று ஆசிரியர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கும் வர்ணனையிலிருந்து 'அது அப்படி நேர்ந்திருக்கலாம் ' என்று உத்தேசிக்க முடிகிறது. நடராஜன் கதாபாத்திரத்தின் முடிவை ஆசிரியர் வேறு மாதிரி வார்த்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.

கதைப்படங்கள் ஒரு டாக்குமெண்டரிப் படச்சூழலிலும், டாக்குமெண்டரிகள் ஒரு கதைப்படத் தொனியிலும் அமைக்கப்படுகிறபோது, ஆழ்ந்த கனம் கூடும் என்ற ட்ரூபோ சொன்னதாக ஞாபகம். அந்தப் பாணியில் நிறைய 'கதைகள் ' ஒரு உலகத்தை எந்தக் கதையுமில்லாமல் படம் பிடித்துக் காட்டியிருப்பது அசோகமித்திரனின் திறமை.

ஸ்டூடியோ சிஸ்டம் பிரபலமாக இருந்த காலகட்டத்தை மையமாகக் கொண்ட நாவல் இது. தற்போது பற்பல மாற்றங்கள் வந்து விட்டன. எந்த சினிமாக் கம்பெனிக்கும் இப்போதெல்லாம் ஸ்டூடியோக்களில் நிரந்தர அலுவலகம் கிடையாது. ஏனெனில் ஸ்டூடியோக்களே நிரந்தரமில்லை (படப்பிடிப்புக்கு) என்கிற அளவு தணித்துப் போய்விட்டது. ஆளாளுக்கு கேமராவை தோள்மீது தூக்கிவைத்துக் கொண்டு வயக்காட்டுப் பக்கம் போய்விடுகிறார்கள். ஆகாத மாமியாரை பார்க்கப்போகும் மருமகள் போல் எப்போதாவது ஒரு தடவை setwork, பேட்ச் வொர்க் என்று தான் ஸ்டூடியோ பக்கம் தலைக்காட்டுக்கிறார்கள். இப்படி மேற்போக்கான மாற்றங்கள் நேரிடினும், அடிப்படையில் கரைந்த நிழல்கள் இன்றும் படிக்கப் புதிதாக இருப்பது அதன் ஆச்சரியம்.

இந்த நாவலில் ஆசிரியர் சினிமா உலகத்தை முழுக்க விண்டு காட்டிவிட்டாரா ? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது ஆசிரியரின் நோக்கமும் அல்ல.

தனக்கு நேர்கிற அனுபவங்களையும், அதனால் பெறப்படும் சிந்தனைகளையும் சார்ந்து எந்த ஒரு பிரச்னை குறித்தும் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்து சேர்வது சாத்தியம் என்றே மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால், எந்தவொரு தீர்மான அபிப்ராயங்களுக்கும் இடம் தராதது வாழ்க்கை. அப்படிப்பட்ட கருத்துக்களைக் குறித்து எள்ளை நகையாடி கெக்கலிகொட்டிச் சிரிப்பது வாழ்க்கை. எனில், அதன் மிகச்சிறிய பகுதியான சினிமாஉலகத்துக்கும் இது பொருந்தக்கூடும். கடலுக்கு உண்டான நியாயம் அதன் துளிக்கும் உண்டுதானே ? இதை அறியாதவரா என்ன அசோகமித்திரன் ?

சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள். சினிமா உலகத்தில் தானாகவே உருவான சட்ட திட்டங்கள்; அந்தச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ முதலாளிகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், புரொடக்ஷன் - புரோகிராம் மேனேஜர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என்று பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பெரும்பாலும் சினிமாவைப்போல் வண்ணமயமாக அமைந்துவிடுவதில்லை. திரையில் பயிரிடும் கனவுகளுக்காக வாழ்வின் கனவுகளைச் சிதைத்து உரமாக்கும் வர்க்கம் குறித்த இப்படியொரு யதார்த்தம் குலையாத நாவல் இதற்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பியக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் அசோகமித்திரன், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவரது பல படைப்புகள் இந்திய-அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. இந்த நாவல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளது. அசோகமித்திரன், 'அப்பாவின் சிநேகிதர்' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1996-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
விலை: ரூ.60