Sunday, December 24, 2006

உறுபசி- எஸ்.ராமகிருஷ்ணன்

கதை, சம்பத் என்ற நண்பனைப் பற்றியது. சம்பத்தின் மரணத்தில் இருந்து தொடங்கும் கதை, அவனது மூன்று நண்பர்கள் - அழகர், ராமதுரை, மாரியப்பன் - ஆகியோரின் பார்வையில் நடத்திச் செல்லப்படுகிறது. மூவரும் கானல் காட்டுக்குப் போய் நண்பனைப் பற்றி யோசிக்கிறார்கள். ஒவ்வொரு நண்பரிடமும் சம்பத் எவ்விதமான உறவு கொண்டிருந்தான் என்பதில் விரியும் கதை, மிகவும் கட்டுக்கோப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவான வார்த்தைகளில் சொல்வதானால், சம்பத் ஒன்றுக்கும் உதவாதவன். வழக்கமான எந்த சட்டகங்களுக்குள்ளும் அவனைப் பொருத்திப் பார்க்க முடியாது. நினைத்த நேரத்தில் நினைத்த வேலையைச் செய்து, நினைத்த எண்ணங்களைச் செயல்படுத்திக்கொண்டு தான்தோன்றித்தனமாக வாழ்பவன். அவனது காதல், மேடைப் பேச்சு, அரசியல் ஈடுபாடு, பின்னால், காசநோய் கண்டு தாம்பரம் சானடோரியம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, 40 நாள் கழித்து இறந்து போகிறான்.


மத்திம வயதிலிருக்கும் எந்தவொரு மனிதனும் தான் கடந்து வந்த வாழ்க்கையின் நிறைவான, சுதந்திரமாக வாழ்ந்த கட்டங்களை பின்னோக்குகையில் அது பெரும்பாலும் அவனுடைய கல்லூரிக்காலமாகத்தானிருக்கும். இந்த சமயத்தில் ஏற்படுகிற நட்பு பெரும்பாலும் கல்லூரி வாசலை தாண்டினவுடனே அற்பாயுளில் மடிந்துவிடும் நிலையில், அதற்குப் பிறகும் அந்த நட்பை தொடரும் வகையில் சூழலை ஏற்படுத்திக் கொள்பவர்கள் பாக்கியவான்கள். அலுவலக இயந்திர வாழ்க்கையின் அலுப்பிலிருந்தும் குடும்பச் சிக்கல்களின் சலிப்பிலிருந்தும் விலகி எப்போதாவது கூடி தங்களைது கல்லூரி நினைவுகளை குடியின் துணையுடன் சிரிப்பும் கும்மாளமுமாக மீட்டெடுத்துக் கொள்ளும் அந்த கணங்கள் அற்புதமானவை. விதவிதமான குணச்சித்திரங்கள் நட்பு என்கிற ஒரே புள்ளியில் தங்களின் தற்போதைய அந்தஸ்தை மறந்து ஒரே சபையில் அமர்வது அற்புதமானவை. இந்த நிலையில் சக நண்பனின் மரணம் ஏற்படுத்தும் வலியும் துயரமும் வீர்யமிக்கவை.



'சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் மூவரும் எங்காவது பரிச்சயமே இல்லாத ஒரு இடத்திற்குப் போய்விடலாம் என்று கானல் காட்டின் பெரும்பாதையில் வந்து இறங்கியிருந்தோம் ' என்று ஒரு சிறுகதையின் ஆரம்பத்தைப் போல் திடுக்கென்று சம்பத்தின் மரணத்தைப் பற்றின ஆரம்பத்தோடு தொடங்குகின்ற இந்த நாவலில் சம்பத் என்கிற மனிதனின் ஆளுமையைப் பற்றின மற்றும் அவனுடைய மரணத்தைப் பற்றின வாசனையால் நிறைந்திருக்கிறது. அழகர், சம்பத், ராமதுரை, மாரியப்பன் என்கிற நால்வர் தமிழ் இலக்கியம் படிப்பதின் மூலம் நண்பர்களானவர்கள். இவர்களில் சம்பத் என்பவனின் மரணத்தைத் தொடர்ந்து அவனைப் பற்றிய நினைவுகள் அவனுடைய நண்பர்கள், காதலி, மனைவி போன்றவர்களால் இந்த நாவலில் விரிகிறது. சம்பத்தின் மரணத்தைத் தொடர்ந்து நடக்கிற மரண ஏற்பாட்டு நிகழ்வுகளும் இந்த நினைவுகளின் ஊடே சொல்லப்படுகிறது.



சம்பத்தான் இந்த நாவலின் மையப்பகுதியாகவும், ஆதார சுருதியாகவும் இருக்கிறான். அவனைப் பற்றின சித்திரம் இயல்பான வண்ணங்களால் திறமையாக தீட்டப்பட்டு இந்த நாவல் முழுவதும் நமக்கு தரிசனம் தருகின்றன. சம்பத்தின் ஆளுமைக்கூறுகள் நாவலில் ஆங்காங்கே சிதறியிருக்கின்றன. அவன் உங்களின் நண்பர்கள் யாராவையாவது உங்களுக்கு நினைவுபடுத்தக்கூடும் அல்லது நீங்களே சம்பத்தாகக்கூட உணரக்கூடும். தான் நினைத்தை உடனே நிகழ்த்திப் பார்க்க பிரியப்படுபவன்; தன்னிடம் உறைந்திருக்கும் பயத்தை மறைக்க மூர்க்கத்தனமாக நடந்து கொள்பவன்; தமிழிலக்கயம் படிக்கப்போய் நாத்திகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்படுபவன்; வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு போல்ட்டு, நட்டு விற்கிறவன்; பீர் குடித்து ஒத்துக் கொள்ளாமல் ஏறக்குறைய சாகப் போய் பிழைக்கிறவன், சில முறையே சந்திக்கிற பெண்ணை தீடாரென தீர்மானித்து ஒரு லாட்ஜ் அறைக்குள் திருமணம் செய்து கொள்கிறவன், அப்பாவை கட்டையால் ரத்தம் வர அடிக்கிறவன், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு மறுநாள் மீன்குழம்பைப் பற்றி பேசுகிறவன் ... என சம்பத்தைப் பற்றின பல நிகழ்ச்சிகளின் மூலம் அவனைப் பற்றி பிரமிப்பாகவும், விநோதமாகவும் நமக்கு தோற்றமளிக்கச் செய்கிறவன். இதனாலேயே அவன் நண்பர்களால் கதாநாயகத்தன்மையுடனும் கூடவே வெறுப்புணர்ச்சியுடனும் பார்க்கப்படுகிறவன்.



காலமும் பரப்பும் குறுகியிருக்கிற காரணத்தினாலேயே இந்தப் படைப்பை நாவல் என்றழைக்க தயக்கமாயிருந்தால் ஒரு செளகரியத்துக்காக குறுநாவல் என்று வகைப்படுத்தலாம். 'நான் சம்பத்தின் கைகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ' (பக்22) போன்ற இலக்கணப் பிழைகள் நாவலின் இடையே நெருடுகின்றன. எல்லா நண்பர்களின் மூலமாகவும் சம்பத்தின் நினைவுகள் விவரிக்கப்பட்டுள்ளதால் எந்த நண்பரின் மூலமாக குறிப்பிட்ட பகுதி பதிவாகிறது என்பதில் சற்றே குழப்பமேற்படுத்தும் வகையில் நாவலின் நடை செல்வதை ஆசிரியர் முயன்றிருந்தால் தவிர்த்திருக்கலாம்.



முழுக்க கற்பனையினாலேயே எழுதப்படும் படைப்பை ஒரிரு பக்கங்கள் தாண்டினவுடனேயே ஒரு கூர்மையான வாசகன் அவதானித்து விட முடியும். மாறாக வாழ்க்கையின் அனுபவத்தின் சாரத்திலிருந்து எழும் நாவல்கள், வாசகனின் மனதில் இனம் புரியான நெருக்கத்தையும் தோமையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இந்த நாவலெங்கும் யதார்த்தமும், உண்மையின் வாசனையுமாக உணர முடிவதால் சமீபத்திய வரவில் குறிப்பிடுத்தகுந்த படைப்பாக இதைக் கொள்ளலாம்

பெரும்பாலும் வாழ்வில் தோல்வி கண்டவர்களை மையமாக வைத்து எழுதப்படும் படைப்புகள் வெற்றி பெற்றிருக்கின்றன. வெற்றிக் கதைகள் எப்படி உற்சாகம் தருகின்றனவோ, அதேபோல் தோல்விக் கதைகள் இலக்கியமாகி இருக்கின்றன. இதுவும் தோல்விபெற்றவனின் வாழ்வையே பேசுகிறது.

No comments: