Sunday, December 17, 2006

சோளகர் தொட்டி

ஆசிரியர்: ச.பாலமுருகன்
விமர்சினம் செய்தவர் : நண்பன்
மூலம் : தமிழ்மன்றம்.காம்

வீரப்பனைப் பற்றி அனைவரும் அறிவோம். ஆனால் அவனைச் சுற்றி வாழ்ந்த மக்களை அறிந்திருந்தோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த மக்களின் எளிய வாழ்க்கை முறை, வனத்துடன் இணைந்து வன விலங்குகளுடன் தாங்கள் வாழ்ந்த வெளியை பங்கிட்டுக் கொண்டு இயைந்து வாழ்ந்த பாங்கு, அவர்களின் இசை, நடனம், இவற்றோடு எளிய மருத்துவமாக கஞ்சா புகைத்தல் என்று ஒரு சிற்றோடை போல வாழ்க்கை இனிதாக ஓடிக் கொண்டிருக்கும்பொழுது அத்தகைய வாழ்க்கை நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் வியாபித்து நிற்கையிலே, மலையினூடாக மர்மமனிதர்கள் இரவில் தீவட்டிகளுடன் நடமாடுகின்றனர்.

வனத்தின் வளங்களைத் தொடுவது தெய்வ குற்றம் என்று அறிவுறுத்தி வளர்த்தெடுக்கப்பட்ட அந்த மனிதர்கள் அச்சத்துடன் இரவுகளைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். மர்ம மனிதர்கள் நடமாட்டம் அதிகரிக்க அதிகரிக்க காவல்துறையும் வந்து சேருகிறது. அத்துடன் அரசின் அதிகாரிகள் என்று நகர நாகரீகம் வந்து சேர, லஞ்சம், அதிகாரம் என்று அனைத்துக் கூறுகளும், புரியாத அந்த மக்களின் வாழ்க்கை முறையை நாசம் செய்யத் துவங்குகின்றன.

தங்கள் வயல்களை இழக்கத் தொடங்குகின்றனர். காவல்துறையைக் கண்டு அஞ்சி காட்டிற்குள்ளே ஓடி ஒளிகின்றன. என்றாலும் காவல்துறை விரட்டுகிறது. ஒன்று கர்நாடகம் அல்லது தமிழ்நாடு. நமக்கெல்லாம் தான் மாநில எல்லைகள் அத்துபடி. ஆனால் அந்த மலைவாழ் மக்களுக்கு எந்த எல்கைகளும் இல்லை. உறவுகள் அந்த எல்லை என்ற மாயக்கோட்டின் இரு பக்கங்களிலும் விரிந்திருக்கின்றன. ஆனால் காட்டிற்குள்ளே செல்லவே அச்சப்படுகின்றனர்.

மற்றொருபுறம் அவர்களுக்கு வனக்குற்றவாளிகளிடமிருந்து சிறு சிறு வேலைகள் - பல மடங்கு சம்பளத்துடன். சிலர் அதனால் கவரப்பட்டு அவர்களுக்கு உதவவும் ஆரம்பிக்கின்றனர். ஒரு கிராமத்தில் ஒருவர் அல்லது இருவரென.

காவல்துறை தன் பங்குக்கு எந்த குற்றச்சாட்டுமின்றி கிராமம் கிராமமாக கைது செய்து இழுத்து வருகின்றனர். ஆண்கள் சிக்கவில்லையென்றால் அவர்களுக்குப் பகரமாக - பிணையாக பெண்கள். அத்துடன் அவர்களது பெண்மையும். தெய்வமாக கருதப்பட்ட வனத்தின் புதர்களிலே கிடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்படுகின்றனர். ஒருவரால் அல்ல பலரால். அது போதாதென்று மற்ற சித்திரவதைகள். பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு துன்புறுத்தல், வலியிலும் வேதனையிலும் துடிக்கும் அவர்களை மேலும்

அவமானப்படுத்த பலரின் முன்னிலையில் நிர்வாணமாக்கி கட்டிப் போடுதல் என்று பலவகையிலும் வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது. யாராவது கொடுமைகள் தாங்காது பலவீனமாகி சாகும் தருவாயில் இருந்தால், உடன் அவர்களுக்கு வீரப்பன் ஆட்களின் உடைகள் உடுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு காட்டில் வீசப்பட்டுவிடுவர் - மோதலில் குண்டடிபட்டு இறந்ததாக.

கதையின் நாயகனாக பிரதானப்படுத்தப்படும் சிவண்ணா என்ற சோளகன் கதை தான் அது. சோளகர்களின் பழக்கவழக்கம் சற்று விநோதமானது. பெண் தன் கணவனல்லாத பிறனுடன் போக வேண்டுமென்றால், பிரிந்து கொள்கின்றனர் - பெரிய வருத்தமின்றி. கணவனை இழந்த பெண் அவனது தம்பியை உரிமை கோரிப் பெறுகிறாள். இன்னும் இன்னும் இது போன்ற பல பழக்க வழக்கங்களும் இயல்பாய் வெளிப்படுகிறது. பிள்ளைகளை அடிப்பது என்ற வழக்கமே இல்லாத அவர்கள், பிறகு தங்கள் குழந்தைகள் காவல் துறையால் அடிக்கப் படும் பொழுது துடித்துப் போய் விடுகின்றனர்.

சந்தர்ப்ப வசத்தால் சிவண்ணாவும் - வனத்துறையில் பணி செய்தாலும் - காவல்துறையால் கைது செய்யப்படுகிறான் - எந்தக் காரணமுமின்றி. காவல்துறையின் கொடூரம் தாங்காது காட்டிற்குள்ளே தப்பி ஓடும் பொழுது தற்காலிகமாக வீரப்பனைச் சந்திக்க சில நாட்கள் அவனுடனே வாழ நேரிடுகிறது. காவல்துறையோ அவனது மனைவியையும், மகளையும் கடத்திக் கொண்டு போய் துன்புறுத்துகின்றனர். பாலியியல் பலாத்காரத்திற்குள்ளாகின்றனர்.

சிவண்ணா இறுதியாக நீதிமன்றத்தில் சரண்டைவதாகக் கதையை முடித்துக் கொள்கிறார் ஆசிரியர். எல்லாம் நீதிமன்றம் தான் வழி. ஆனால் நீதிமன்றத்திற்கு அனைத்தும் வருமா?

பத்திரிக்கைகள் கட்டிய கதைகளை மட்டும் தான் கேட்டோம். ஆனால் அந்த மக்களுடன் பலவருடங்கள் பழகி, அவர்களுக்காக உழைத்து வரும் ஒரு வழக்கறிஞரால் எழுதப்பட்டுள்ளது.

எளிய அலங்காரமில்லாத மொழி நடை. இலக்கிய இசங்களில் வழுக்கி விழுந்துவிடாமல் ஆனால் அதே சமயம் சுவை குன்றி விடாமல் விறுவிறுப்பாக எழுதியதற்காக பாராட்டலாம். மொழி நடை, கதை சொல்லும் உத்தி என்பனவற்றையெல்லாம் மீறி வாசிக்க வைக்கிறது என்றால் அதற்குக் காரணம் கதையின் கரு தான். வாசித்துப் பாருங்கள் - ஆரம்ப பக்கங்களில் அந்த இடங்களிலெல்லாம் போய் வாழ்ந்து பார்க்கலாம் என்று தோன்ற வைத்து பின்னர் நாட்செல்லச்செல்ல இப்படிக் கூட மனித மிருகங்கள் சட்டத்தின் துணை கொண்டு நடந்து கொள்ளுமா என்று அஞ்சச் செய்யும்.

கதையை வாசித்து முடித்த பொழுது தோன்றியது:
வீரப்பனைக் கொன்றாகிவிட்டது. ஆனால் வீரப்பன் அளவிற்குக் கொடுமை செய்த அந்த சிறப்புப் படைகுற்றவாளிகளுக்கு தண்டனையே கிடையாதா?

நீதி தெருவில் தான் வழங்கப் படும் என்றால் - வீரப்பன் செத்துப் போகவில்லை என்றே தோன்றுகிறது. ஆமாம்அந்த காவல்துறை குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை என்றால் இன்னும் சிலபல வீரப்பன்கள் தோன்றக் கூடும்.


வனம் வெளியீடு,
17 பாவடித் தெரு,
பவானி 638 301
தொலை பேசி எண்: 94432 133501.விலை 100 ரூபாய்

1 comment:

நண்பன் said...

நீங்கள் நான் எழுதிய விமர்சனத்தை எடுத்துக் கையாண்டமைக்கு மிக்க நன்றி. உங்களின் தனி மடலும் கிடைக்கப் பெற்றேன். எந்த வித ஆட்சேபணையும் இல்லை.

இன்று தான் இத்தளத்தைப் பார்க்கின்றேன். எனது 'பிடித்த பக்கங்களில்' சேமித்து வைத்திருக்கிறேன் இத்தளத்தை.

தொடர்ந்து வாசிப்பேன்

அன்புடன்
நண்பன்