Friday, December 22, 2006

அம்மா வந்தாள்-தி.ஜானகிராமன்


அம்மா வந்தாள் பற்றி ஜெயமொகன்

மரபான தமிழ் ஒழுக்கவியல் மீது ஃபிராய்டியம் ஓங்கி அடித்ததின் விளைவு. அலங்காரத்தம்மாள் தன் ( நெறிதவறியதனால் விளைந்த) குற்ற உணர்வை வெல்ல மகன் அப்புவை வேத பண்டிதனாக்க முயல்கிறாள். நெறிகளுக்கு அப்பால் உள்ள காதலின் தூய்மையை அப்பு உணர்ந்து தன்னை விரும்பும் இளம் விதவை இந்துவை ஏற்கிறான். ஜானகிராமனின் படைப்புகளில் வரும் 'காமம் கனிந்த ' அழகிய பெண்கள் தமிழ் வாசகனுக்குள் பகற்கனவை விதைத்தவை. பாலகுமாரன்கள் முளைக்கும் நாற்றங்கால்.


பத்து சிறந்த தமிழ் நாவல்களில் இந்நாவல் கண்டிப்பாக இருக்கும்

மரபுகள் ஒருவகையில் நமக்கு வேலிகளே. தொகுக்கப்பட்டு, கட்டாயப் படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்த பழக்கவழக்க வாழ்க்கை முறைகளைத்தான் மரபு என்று குறிப்பிடுகிறோம். தேர்வுகளுக்கு மாதிரி வினாத்தாள் கிடைத்து விடுவது போல இம்மரபு வழிகளில் பழகிய செயல்முறை நமக்கு முன்மாதிரியாக உடனடியாகக் கிடைத்து விடுவதால் பல கேள்விகளை எதிர்கொள்வது எளிமையாகி விடுகிறது. பழகிப் பழகி, மரபுகள் சுட்டிக் காட்டுகிற பழக்க வழக்கங்களே மனிதமரபு என்கிற மயக்கத்துக்கு ஆட்பட்டு விடுகிறோம். மனித மரபு, நாம் வரித்துக் கொண்ட மரபுகளை விட விரிவானது என்கிற நிதானத்தை இழந்து விடுகிறோம். மனித மரபை விட நாம் கட்டிக் காத்து வரும் மரபே உயர்வானது என்கிற எண்ணத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். அதனால் நாம் வாழும் எதார்த்த மரபுச்சூழலில் விடை அறிய முடியாத கேள்வியொன்றை எதிர்கொள்ளும்போது தடுமாறுகிறோம். அதை மனிதமரபிலும் வரலாற்றிலும் வைத்துப் பார்ப்பதற்கு மாறாக, நமக்குப் பழகிய மரபின் பின்னணியில் மட்டும் பார்த்து உடனடியாக ஒரு குற்றப் பத்திரிகையை வாசித்து விடுகிறோம். குற்றம் சுமத்தி பிரச்சனைக்குரிய ஒன்றை வேலிக்கு மறுபக்கம் தள்ளினால்தாம் நமக்கு நிம்மதி ஏற்படுக்ிறது. மரபுக்கு நம்மால் எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற அச்சமும் அப்படி நேரும்போது அதைத் தொலைத்துக் கழுவி மரபைத் துாய்மை செய்ய வேண்டியது நம் கடமை என்றும் அப்பாவித்தனமாக நம்பி விடுகிறோம்.

ஒரு வேதம் படிக்கும் இளைஞன் ஒரு இளம் விதவையிடம் ஈர்க்கப்படுகிறான் ,இறுதியாக அவளுடன் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ துணிகிறான்.இவன் சகோதரர்களில் பாதி பேர் ,இவன் அம்மா வேறோருவரிடம் கொண்ட உறவினால் பிறந்தவர்கள்.இவன் அப்பா அவளுடனே வாழ்கிறார்.அந்த குடும்பம் நிலையில்லா மௌனத்தில் தத்தளிக்கிறது.ஒருவன் யாரிடம் பழக வேண்டும் யாரிடம் பழக கூடாது என்று தீர்க்கமான விதிகளை நிறுவும் சமூகம் , அவ்விதிகள் மீறப்படும் போது ஒன்றும் செய்ய முடியாத  நிலையில் இருக்கிறது

'அம்மா வந்தாள் ' நாவலில் மரபின் முன்னிலையில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. இரண்டையுமே எதிர்கொள்கிறவன் அப்பு. தாயாரான அலங்காரத்தம்மாளின் கூடா ஒழுக்கம் ஒரு கேள்வி. விதவையான இந்துவின் அன்பை ஏற்றுக் கொள்வது எப்படி என்பது இரண்டாவது கேள்வி. இரு கேள்விகளுமே பெண் சார்ந்தவை. எதிர்கொள்பவன் ஆண். வேதங்களின் உண்மையையும் அழகையும் பதினாறு ஆண்டுகள் தொடர்ச்சியாக விடாமல் படித்துத் தெரிந்து கொண்ட ஓர் ஆண்.

இரண்டு கேள்விகளாலும் உடனடியாக அவன் நிலைகுலைந்து விடுகிறான். எவ்வளவுதான் வேதம் படித்து உண்மையின் நுட்பம் புரிந்தவனாக இருந்தாலும் சராசரியான வாழ்க்கை மரபில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கக் கூடிய மற்றவர்களைக் காட்டிலும் மிக அதிக அளவு நிலைகுலைந்து விடுகிறான். எட்டு வயதில் அப்பா கொண்டு வந்து விட்டபோது இருந்த மனநிலையிலேயே அவன் பதினாறு ஆண்டுக் காலம் ஓட்டி விடுகிறானே தவிர, அந்த எட்டு வயது மனநிலை அவனிடம் மாறவே இல்லை. எட்டு வயதில் சக மாணவர்கள் காட்டாமணக்குச் செடி மறைவில் புகைபிடித்துக் கொண்டு உட்கார்ந்த போது உதட்டைக் கடித்து, விசித்து, விம்மி அழுது தீர்த்த அதே அப்புவைத்தான் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தாயாரின் உறவுச் சிக்கலை அறிந்து குமுறி அழுகிறவனாகவே பார்க்கிறோம்.

.

ஒரு ஆசாரமான பிராமண குடும்பத்தின் பிண்ணணியில் எழுதபட்டிருக்கும் இந்நாவல் கட்டுகோப்பான கதை மற்றும் உயிருள்ள கதைமாந்தர்களை கொண்டது.

தி.ஜா வின் பிற நூல்களை (மோகமுள்,உயிர்த்தேன்,அன்பே ஆரமுதே) போல் அல்லாமல் இந்நூலில் ஆழமான பகுப்பாய்வுகளில் அவர் இறங்கவில்லை.மேலும் எப்போதும் போல் படிப்பவர்களிடமே முடிவை விட்டுவிடுகிறார்.இதுவே தி.ஜா வின் பலம்.

இந்த (சர்ச்சயைகுரியாதாக்கப்பட்ட)நாவல் கலகியில் 1968ல் தொடர்கதையாக வந்ததேன்பது ஒரு ஆச்சிரியம்




 

No comments: