Saturday, December 23, 2006

சுந்தர ராமசாமியின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்'

க.பஞ்சாங்கம்
மூலம்:thinnai.com

ஆலப்புழையில் 15 பிள்ளைகளோடு பிறந்த எஸ்.ஆர்.எஸ் தந்தை தலைகீழாகக் கவிழ்ந்தபோது சிதறிய நெல்லிக்காய்களில் ஒன்றாய் கோட்டயம் வந்து விழுகிறார். ஒரு கதை மாந்தர் போல நாவலில் வரும் 'ஸ்ரீநிவாஸ் ' என்ற வீடு, எஸ்.ஆர்.எஸ்,. அவர் மனைவி லட்சுமி,. தொடர்பு வைத்துள்ள ஒரே சகோதரி பங்கஜம், அவர் கணவன் அனந்து, பிள்ளைகள் பாலு, ரமணி, கல்விகற்க ஸ்ரீநிவாஸ் வந்து சேர்ந்த லட்சுமியின் தங்கை வள்ளி, அதரவற்ற அனந்தம், வேலைக்காரி கெளரி, கணக்கெழுதும் கரீம் மாப்ளே - இது ஒரு குடும்பம். ஒன்று விட்ட சித்தப்பா பையன் சாமு, அவன் மனைவி சீதா, பிள்ளைகள் லச்சம், கோமு இது ஒரு குடும்பம். எஸ்.ஆர்.எஸ்-இன் மாமா சேது அய்யர், அவரது பிள்ளைகள் லட்சுமி, வள்ளி, கோமதி, கோபு, வாசு, மாது, மருமகள் ருக்கு-இது ஒரு குடும்பம்; டாக்டர் பிஷாரடி, பைத்தியமான அவர் மனைவி சாவித்திரி, பிள்ளைகள் ஸ்ரீதரன், சுகன்யா, அப்புக்குட்டன் -இது ஒரு குடும்பம்; கைலாசமடம் நாராயண அய்யர் குடும்பத்தின் வாரிசுகளான கைலாசமடம் சுப்ரமணியம், ஐந்தாவது மகன் சம்பத் இப்படி ஒரு குடும்பம். சனிக்கிழமை பிற்பகலில் வேனல் பந்தலில் செங்கல்சூளை கருநாகப் பள்ளி, ஆசிரியர் காந்தியவாதி கோவிந்தன் குட்டி, அவர் சீடர் செல்லப்பா, டாக்டர் பிஷாரடி, தேயிலைக்கம்பனியின் பிரதிநிதி சம்பத், பிடில் ராமய்யர், கைலாசமடம் சுப்ரமணியம், கே.ஆர் நீலகண்டப்பிள்ளை;எஸ்.ஆர்.எஸ்இன் பெயரைக் கெடுக்கவென்று அவதாரம் எடுத்துள்ள புதுப்பணக்காரன் -அரசியல்வாதி - அவுரான் மாப்ளே, எலிசபெத் டாச்சர், இவர் கணவர் -கோட்டயம் காந்தி என்று அழைக்கப்படும் ச.எம்.தோமஸ், கார்த்தியாயினி, பலருடனான பாலியல் உறவுக்கு பலியாகி அழியும் நாராயணி, லச்சத்தை தவறான உறவுக்குப் பயன்படுத்தும் வைத்தியர், வாழைத்தோட்டம், லட்சுமியின் ஆஸ்த்மா நோய், டாக்டர் மேத்யூ தரகன் என்று வருகின்ற பல்வேறுபட்ட மனித உறவுத் தளத்தில் நிகழ்த்தப்படும் மொழியாடலில் கரைந்து கிடக்கும் சூட்சமங்களையும், இடுக்குகளையும் மெளனங்களையும் வக்கிரங்களையும் தனக்கான மொழியில் பதிவு செய்வதே நாவலின் இயக்கமாக அமைகிறது 'மனித மனங்கள் எவ்வளவு வக்கிரமாக ஒன்றையொன்று பின்னி முடிச்சு போட்டுக் கொண்டு விடுகின்றன ' (ப.591) நாவல் முழுக்க இதை வெளிக் கொணரத்தான் முயற்சி நடப்பதுபோலத் தெரிகிறது.

ஊதாரியான அப்பனுக்குப் பிறந்த பிள்ளை 'லச்சை ' மிகவும் புத்திசாலிப் பையனாக இருந்தும், தான் தோன்றித்தனமாய்ச் சுற்றியதால் யாருக்கும் பயன்படாமல் போய்ப் பிணமாக வந்து வீட்டுக்குள் விழுகிறான். தன் விருப்பம் போல் உருவொக்கச் சிலத் தந்திரமான நடவடிக்கைகளை மகன் மேல் செலுத்தியதன் மூலம், குடும்பத்தையே நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறார் எஸ்.ஆர்.எஸ்.


மேலும் பெருந்தன்மையோடு, ஆதரவின்றி வந்த விதவை ஆனந்தத்திற்கு வாழ்வு கொடுத்தார். தன்னோடு இணைத்து நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம் கண்டார். அவளும் இப்பொழுது ஒரிரவில் செல்லப்பாவுடன் ஓடிவிட்டாள். தன் வீட்டில் இருந்து கல்வி கற்க வந்த கொழுந்தியாள் வள்ளியும், வேறு சாதியிலுள்ள ஸ்ரீதரனைக் காதலிக்கிறாள். அவனோடு இணைத்து வைக்க எந்த முயற்சியும் செய்யாமல், அப்பன் வந்து கூப்பிட்டுப் போகும்போதும் 'சும்மாவே ' இருந்து விடுகிறார்.

கடைசியில் எல்லாம் சூனியம்தானா ? வேனிற் சபையில் காரசாரமாக விவாதித்தவை எல்லாம் வீண்தானா ? 'துல்லியமாய்ச் சிந்திப்பவன் செயலுக்கு ஆகமாட்டான்! என்பதும் உண்மையா ? கதைசொல்லி நம்மைச் சூன்யத்தில் தள்ளவில்லை. புதிய பிறவி எடுக்கச் சொல்கிறார். செத்த பிறகு தான் புதிய பிறவி என்பதில்லை. இந்த இப்பிறவியிலேயே பலப்பல புதிய பிறவிகளை உற்பத்திச் செய்து கொள்ள முடியும். அதற்கு என்ன வழி ? தட்டுமுட்டுச் சாமான்களைத் தூக்கி கொண்டு இடம் பெயர்ந்து விடுவதுதான் அந்த வழி. நாடோடியாகு! எந்த அளவிற்கு உன்னை நாடோடியாக்கிக் கொள்கிறாயோ அந்த அளவிற்கு இங்கே வாழ்க்கை வாழத் தக்கதாக இருக்கும். அறியத் தக்கதாக இருக்கும். நம்முடைய வனங்களிலும் மலைகளிலும் காடுகளிலும் காய்ந்த நிலப்பகுதிகளிலும் அலைகிற சிலப்பதிகார, இதிகாசக் கதை மாந்தர்கள் நினைவுக்கு வருகிறார்கள்; அப்படி அலைந்தாலும் இந்த மனித உயிருக்கு விடுதலை சாத்தியம்தானா ? பனி பொழியும் காலையில் நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு சில்லான் தார்ச்சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு மூச்செடுத்து ஓடிப் புல்தரையை அடைந்தவுடன் 'பார்த்தாயா! உன் காலில் மிதிபடாமல் பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டேன் ' என்று தலையைத் தூக்கிப் பேசுவதுபோல் தோன்றுகிறது.

 இந்த நாவல் நிறைய வெளிகளோடும், மெளனங்களோடும் படைக்கப்பட்டிருக்கிறது. பிராம்மணர்களைப் பற்றிய இடங்களில் மட்டும் பிராமணப் பேச்சு நடை; மற்ற இடங்களில் எழுத்து நடை எனப் பின்பற்றப் படுகிறது. மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.


 

No comments: